

கிருஷ்ணகிரியில் நாட்டுப்புறக் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள், கடந்த 2 ஆண்டுகளாக போதிய வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், விழாக்களை நடத்த விரைவில் அரசு அனுமதிக்க வேண்டும், வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். கரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வை கலைநிகழ்ச்சிகள் மூலம் நேற்று வெளிப்படுத்தினர்.
மாவட்ட கிராமிய கலைஞர்கள், 7 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானாவில், நேற்று நடந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிக்கு மாநில துணை பொதுச் செயலாளர், கலைவளர்மணி டாக்டர். குருமூர்த்தி, தலைவர் சுப்பிரமணி, செயலாளர் பெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். துணைத் தலைவர் மணி, பொருளாளர் தங்கராஜ், கவுரவத் தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமியக் கலைஞர்கள், பம்பை, தப்பாட்டம், தெருக்கூத்து, மரக்கால் ஆட்டம், எமதர்மன், சித்ரகுப்தன், பரமசிவன், மகாவிஷ்ணு, லட்சுமி, கரோனா வேடம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.