

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
ராமர் மேல் கொண்ட பக்தியால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் நன்கொடை அளித்துள்ளனர். கட்சி சார்பில்லாமல் காங்கிரஸ் கட்சியினரும் நன்கொடை அளித்துள்ளனர்.
உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வந்துள்ள நன்கொடை சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
நில பேரம் நடந்துள்ளது. ரூ.2 கோடிக்கு வாங்கிய நிலத்தை, ஒரு சில நிமிடங்களிலேயே ரூ.18 கோடியை அறக்கட்டளையிடம் இருந்து பெற்றுக் கொண்டு நிலத்தை வழங்கியுள்ளனர். முழுமையான ஊழல் நடந்துள்ளது. பிஎஸ்என்எல் போன்ற மத்திய அரசு நிறுவனங்களை விற்பதைப் போல் ராமரையும் பாஜக விற்றுள்ளது. புனித தன்மையை வியாபாரம் செய்யும் அளவுக்கு வந்துள்ளனர். ராமர் பக்தர்கள் அனைவரிடமும் இது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுத உள்ளேன். ராமர் பக்திக்காக திரட்டப்பட்ட நிதியை, சுயநலத்திற்காக கொள்ளை அடிக்கின்றனர்.
ராமர் பக்தர்கள் நிலைப் பாட்டில் காங்கிரஸ் எம்பிஎன்ற முறையில் எனது கருத்து களை குடியரசுத் தலைவருக்கான கடிதத்தில் முன்வைப்பேன் என்று தெரிவித்தார்.