Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க - தனி ஆணையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் :

கிருஷ்ணகிரி மாவட்டம் என்.தட்டக்கல் கிராமத்தில் உள்ள மாந்தோட்டத்தில் கோரிக்கை வாசகம் அடங்கிய தட்டிகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கிருஷ்ணகிரி

மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்துகுறைவான விலைக்கு மாங்காய் களை கொள்முதல் செய்வதை தடுக்க மா விவசாயிகளுக்கென தனி ஆணையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி அடுத்த என்.தட்டக்கல் கிராமத்தில் அனைத்து மாவிவசாயிகளின் கூட்டமைப்பு மற்றும் கேஆர்பி அணை இடது புறக் கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.

இதுதொடர்பாக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சவுந்தர ராஜன், பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு ஆகியோர் கூறியதாவது:

நிகழாண்டில் மாமரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்திருந்தா லும், கடும் பனிப்பொழிவு, பூச்சி தாக்குதலால் பூக்கள் கருகின. தொடர்ந்து உரிய நேரத்தில் மழை பொழிவு இல்லாததால், பூக்கள் பூத்தும் காய் பிடிக்கவில்லை.

தண்ணீரை விலைக்கு வாங்கி விளைவிக்கப்பட்ட காய்கள் மட்டுமே சந்தைக்கு விற்பனைக்கு வந்தன. அதற்கும் போதிய விலை கிடைக்காமல், சாலையில் கொட்டும் நிலை ஏற்பட்டது. மா விவசாயிகள் தொடர் இழப்புகளை சந்தித்து வருவதால், தமிழக அரசு வேளாண், தோட்டக்கலைத் துறை மற்றும் மாவிவசாயிகளை கொண்ட குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு மா விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், மாங்கூழ் தொழிற் சாலை உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து குறைவான விலைக்கு மாங்காய்களை கொள்முதல் செய்வதை தடுக்க மா விவசாயிகளுக்கென தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x