கரோனா பாதிப்பால் உயிரிழந்த -  ஆதிதிராவிடர் இனத்தவரின் குடும்பத்தினருக்கு கடனுதவி :

கரோனா பாதிப்பால் உயிரிழந்த - ஆதிதிராவிடர் இனத்தவரின் குடும்பத்தினருக்கு கடனுதவி :

Published on

திருவள்ளூர் மாவட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த, ஆதிதிராவிடர் இனத்தவரின் குடும்பத்தில், வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் `ஆஷா' என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிடர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில், அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில், கடனை 6 ஆண்டுகளுக்கு திரும்ப செலுத்தலாம்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கரோனா வைரஸால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை (044 - 2766 5539) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in