

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதால், தளர்வு களுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் 10-ம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 121 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. முன்னதாக அனைத்து கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, 5 அடி இடைவெளியில் வட்டம் வரையப்பட்டது. கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில், பழையபேட்டை செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஒருவர், மது பாட்டிலுக்கு தேங்காய், பழம் உள்ளிட்டவை வைத்து பூஜைகள் செய்து வணங்கினார்.
கடைகளில் உயர்ரக மதுவகைகள் மட்டுமே இருந்தது. குறைந்த விலையில் மதுபானங்கள் இருப்பு இல்லாததால் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூரில் ஊரடங்கு காலத்தில் பலர் கர்நாடக மாநில மதுக்கடைகளில் மதுபானங்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.இதனால், நேற்று ஓசூரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோதும், கடைகளில் மது வாங்க மது அருந்துவோர் அதிக ஆர்வம் காட்டவில்லை.
கரோனா தொற்று குறையாத சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளிக்காத நிலையில், நேற்று தருமபுரி மாவட்ட எல்லையோரக் டாஸ்மாக் கடைகளில் வெளி மாவட்டத்தினர் அதிக அளவில் வந்து மது வாங்கிச் சென்றனர்.குறிப்பாக தொப்பூர் அடுத்த பாளையம்புதூர், உம்மியம்பட்டி, ஜருகு, பொம்மிடி அடுத்த கொப்பக்கரை, பெரும்பாலை அருகிலுள்ள சின்னம்பள்ளி உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கிச் சென்றனர்.