

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி மையம் சார்பில் கரோனா விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் குறுந்தகட்டை வெளியிட்டார்.
விழிப்புணர்வு பாடலுக்கு பில்டர்ஸ் அசோசியேஷன் தூத்துக்குடி மையத்தின் முன்னாள் தலைவர் ஏ.பி.பியோ இசை அமைத்துள்ளார். பி.மார்ட்டினா பாடியுள்ளார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மையத்தின் தலைவர் ஆஸ்கார், செயலாளர் வில்லிஸ் செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தமிழன்டா கலைக்கூடத்தின் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பில் 'மாஸ்க் போடுங்க, மாஸ்க் போடுங்க' என்ற கரோனா விழிப்புணர்வு பாடல் ஒலி, ஒளி குறுந்தகடு வெளியீட்டு விழா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. அமைச்சர் பெ.கீதாஜீவன் குறுந்தகட்டை வெளியிட்டார். நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் மோகன் சி.லாசரஸ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தமிழன்டா கலைக்கூடம், தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையத்தின் தலைவர் ஜெகஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.