

தூத்துக்குடி ராஜீவ்நகர், அன்னை தெரசா நகர், பர்மா காலனி, பாரதி நகர், நிகிலேசன் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டின் முன்பு கார்களை நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று காலையில் பார்த்த போது பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் வேல்முருகன், எஸ்ஐ சங்கர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தியதில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 9 கார்கள், ஒரு வேன், ஒரு ஆட்டோ ஆகிய 11 வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் சிலர் கல்லால் தாக்கி கார் கண்ணாடியை உடைப்பது தெரியவந்தது.
மர்ம நபர்கள் கார்கள் மீது கல்வீசி தாக்கிய போது அந்த வழியாக வந்த எட்வர்டு என்பவர் மீதும் கற்கள் விழுந்தன. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.
இது தொடர்பாக தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த அஜித்குமார் (22), பிச்சையா மகன் பரத் (25) ஆகியோரை சிப்காட் போலீஸார் கைது செய்தனர்.