

கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க, நேரடியாக அனைத்து நகரங்களுக்கும் சென்று களப்பணியாற்றும் முதல்வருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும், என திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவரும், பர்கூர் எம்எல்ஏவுமான டி.மதியழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 30 நாட்களில் 300 நாட்களுக்கான சாதனைகளை படைத்துள்ளார். கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரண நிதியும், 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.
இதே போல், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, நகர பேருந்துகளில் மகளிர், திருநங்கைகளுக்கு கட்டணமின்றி பயணம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மக்கள் பயன்பெறும் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளால், தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க நேரடியாக அனைத்து நகரங்களுக்கும் சென்று களப்பணியாற்றும் முதல்வருக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.