

ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் சென்று வர அரசு உரிய போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி வட்டாரக் கிளையின் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடந்தது. வட்டாரத் தலைவர் ஹென்றிபவுல் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நிசார்அகமது, மரியசாந்தி மற்றும் ரோஸ்லின்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், இயக்கத்தின் புரவலர் கிருஷ்ணாஜி பேசினார். வரும் 14-ம் தேதி முதல் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மற்ற துறைகளில் நடைபெறுவது போல் ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பான்மையான பள்ளிகளுக்குச் செல்ல ஆசிரியர்கள் பேருந்தையே நம்பி உள்ளனர்.
தளி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் 2 பேருந்துகளை பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பள்ளிக்குச் சென்று வர அரசு உரிய போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் அறிவரசி நன்றி கூறினார். கூட்டத்தில், துணை செயலர்கள் நளினப்பிரியா, பிரியதர்ஷனி, சாதிக்உசேன், யாரப் பாஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.