Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு - கரோனா நிவாரண உதவி முதல் தவணை வழங்கும் பணி தொடக்கம் :

தமிழகத்தில் குடும்ப அட்டை பெறாத, மூன்றாம் பாலினத்தவர் நலவாரிய அடையாள அட்டை பெற்றுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கு, கரோனா நிவாரண உதவித் தொகையில் முதல் தவணை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

அந்த வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் குடும்ப அட்டை பெறாத, நலவாரிய அடையாள அட்டை பெற்றுள்ள 222 மூன்றாம் பாலினத்தவருக்கு, நிவாரண உதவி தொகையில், முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியை நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், முதல் கட்டமாக ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 50 மூன்றாம் பாலினத்தவருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மற்றும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் ஆகியவற்றின்கீழ், ஆவடி தொகுதிக்கு உட்பட்ட 4 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், 11 பேருக்கு ரூ.4.20 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் திருமண நிதியுதவி ஆகியவற்றை பால்வளத் துறை அமைச்சர் வழங்கினார்.

மேலும், ஆவடி பருத்திப்பட்டு ஏரிக்கு செல்லும் வரத்துக் கால்வாய்கள் அமைந்துள்ள வசந்தம் நகர், விவேகானந்தா நகர் ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு மழை காலங்களில் நீர் தேங்காமல் இருக்கவும், தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்றவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) ராஜராஜேஸ்வரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளுக்கான இணை இயக்குநர் ராணி, ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன், ஆவடி வட்டாட்சியர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x