

ஈரோடு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வனப்பகுதி அருகே உள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லை அருகே பர்கூர், வெள்ளித்திருப்பூர், பங்களாபுதூர், பவானிசாகர், ஆசனூர், கடம்பூர், தாளவாடி உள்ளிட்ட காவல்நிலையங்கள் அமைந்துள்ளன. கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளில் அவ்வப்போது மாவோயிஸ்டுகள் நடமாட்டம் கண்டறியப்படும் நிலையில், அவர்கள் தமிழக எல்லைக்குள் ஊடுருவி விடாதபடி சிறப்புப் பிரிவு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியையொட்டியுள்ள காவல்நிலையங்களில் சோதனைச்சாவடி அமைத்தும், பாதுகாப்பை பலப்படுத்தியும் கூடுதல் கண்காணிப்பு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்துவதில் காவல்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த சூழலைப் பயன்படுத்தி, மாவோயிஸ்டுகள் தமிழக எல்லைப்பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வனப்பகுதியையொட்டியுள்ள சோதனைச்சாவடிகள், காவல்நிலையங்கள் உஷார்படுத் தப்பட்டுள்ளன.
மேலும், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நக்சல் பிரிவு போலீஸார், வனத்துறையுடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாளவாடி சோதனைச் சாவடியில், துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், ஆயுதப்படை போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தவிர நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் கண் காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுமென வனப்பகுதி கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.