கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் - ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் : நாடக, நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் -  ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் :  நாடக, நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை
Updated on
1 min read

ஊரடங்கு காரணமாக தொழில் வாய்ப்பை இழந்துள்ள தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கரோனா முதல் மற்றும் 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கோயில் திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், மேடை நாடகங்கள் மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால், இதை நம்பியிருந்த கலைஞர்களுக்கு முற்றிலும் தொழில் வாய்ப்பு பறிபோனது.

தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. நிகழாண்டில், இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. எனவே, நிகழாண்டு தமிழக அரசு தங்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, மன்னார்குடி இயல், இசை, நாடக நடிகர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறியது:

மேடை நாடகக் கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஓராண்டில் 6 மாதங்கள் மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு கிடைக்கும். இதைக் கொண்டுதான் ஆண்டு முழுவதுக்குமான குடும்ப வரவு செலவுகளை பார்த்துக்கொள்கின்றனர்.

குறிப்பாக, மே மாதம் தொடங்கி ஜூன், ஜூலை மாதங்களில் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. நிகழாண்டிலும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம்.

கடந்த ஆண்டு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரியபோதும், ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக, நிகழாண்டிலும் எங்களின் குடும்பம் மிகுந்த வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை உணர்ந்து, கலை பண்பாட்டுத் துறை மூலம் தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து, நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in