Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை கடைப் பிடிக்காதவர்களிடம் இருந்து இதுவரை 83 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் கரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை 9.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதமும் 1.80-ல் இருந்து 2.11-ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,970 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் 794 கிராமங்களில் கரோனா பாதிப்பு உள்ளது. முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்று விரைவாக கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது வேலூர் மாவட்டத்தில் 7.0 சதவீதமாக உள்ளது. இது பிற மாவட்டங்களை காட்டிலும் மிகவும் குறைவானதாகும்.

மாவட்டம் முழுவதும் தினசரி 75 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 9 லட்சத்து 91 ஆயிரத்து 262 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 110 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 21.86 சதவீதமாகும். குறிப்பாக, தமிழகத் திலேயே முதன் முறையாக ரேஷன் கடை பணியாளர்களுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி வேலூர் மாவட்டத்தில் போடப்பட்டுள்ளது.

கரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து இதுவரை 83 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 16 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

கரோனா தொற்று ஆரம்பகட்டத்தில் உள்ளவர்கள் வீடு களிலேயே தனிமைப்படுத்துவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையில் விற்பனை செய்ய வேலூர் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது. விதிமுறைகள் மீறி மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட கடைக்கு ‘சீல்' வைத்து, உரிமம் ரத்து செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிப்பது, கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்களை பெறுவது, கூடுதலாக ஆக்சிஜன் செறிவூட்டிகளை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் 3-வது அலையில் குழந்தைகள் தொற்றுக்குள்ளாவார்கள் என்பதால் மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை 9.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x