

கிருஷ்ணகிரியில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்தையா (45). கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி ஜோதி (40), இவர் மாரண்டஅள்ளி அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் முத்தையா, ஜோதி ஆகியோர் கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த வேலு(57) என்பவர், பழைய சப்-ஜெயில் சாலையில் வைத்துள்ள கருவாடு கடைக்கு இருவரும் சென்றனர். அங்கு கருவாடு வாங்கிய முத்தையா, அதற்காக 200 ரூபாய் நோட்டை கொடுத்தார். அதனைப் பெற்ற வேலு, இது கள்ள நோட்டு போல் தெரிகிறது. எனவே, வேறு ரூபாய் இருந்தால் கொடுங்கள் என தெரிவித்தார். இதனைக்கண்டு கொள்ளாமல் 2 பேரும், அருகில் உள்ள மற்றொரு கடைக்குச் சென்றனர். சந்தேகமடைந்த வேலு, அவ்வழியே ரோந்து சென்ற தலைமை காவலர் முருகன் என்பவரிடம் தெரிவித்தார். இதையடுத்து முத்தையா, ஜோதி ஆகிய இருவரையும் பிடித்து, இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே எர்ரகாடு பகுதியைச் சேர்ந்த பூசாரி முருகன் (47) என்பவர் ரூபாய் நோட்டுக்களை கொடுத்ததாகத் தெரிவித்தனர்.
பின்னர், பென்னாகரம் சென்ற போலீஸார் அங்கு முருகன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு கலர் பிரிண்டர் இயந்திரங்கள் - 2, நகல் எடுத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுக்கள் 20, 200 ரூபாய் நோட்டுகள் 57, 100 ரூபாய் நோட்டுகள் 270 என மொத்தம் ரூ.48 ஆயிரத்து 400 மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற முத்தையா, ஜோதி, முருகன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.