

உள்ளாட்சி துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனக் கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
மனுவில் தெரிவித்துள்ளது: தமிழக அரசு கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணமும் வழங்கி வருகிறது.
ஆனால், உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை, முகக்கவசம், உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஏஐடியுசி சம்மேளனத்தின் சார்பில் உள்ளாட்சித் துறை உயர் அலுவலர்கள் மூலமும் அரசுக்கு மனு அனுப்பப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம் தலைமையிலும், பட்டுக்கோட்டையில் தூய்மைப் பணியாளர் சங்கத் தலைவர் செ.சின்னப்பிள்ளை தலைமையிலும், பேராவூரணியில் தூய்மை பணியாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.பாண்டியன் தலைமையில், மனுக்கள் அளிக்கப்பட்டன.