Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

சிற்றாறு அணையில் நீர்விளையாட்டுடன் படகுத்தளம் : குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த முடிவு

குமரியில் சுற்றுலாவை மேம் படுத்தும் வகையில், சிற்றாறு அணையில் படகுத்தளத்துடன், நீர்விளையாட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா கலைப் பண்பாடு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் கடந்த 4-ம் தேதி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களைப் பார்வையிட்டார்.

அப்போது அவர், கன்னி யாகுமரி பூம்புகார் படகு தளம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, திரிவேணி சங்கமம், சன்செட் பாயின்ட், முட்டம் கடற்கரை, மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி, சிற்றாறு அணை உள்ளிட்ட பகுதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை யில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பேசியதாவது:

முட்டம் கடற்கரையில் உள்ள புதர்களையும், கழிவுகளையும் அகற்றி, அலங்காரச் செடிகள் வளர்க்கவும், கழிப்பறைகள் கட்டவும், முட்டம் கலங்கரை விளக்க த்தை சீரமைக்கவும் வேண்டும். கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் செல்லும் நடைபாதை ஓரங்களில் பசுமை செடிகள் அமைத்தல், பூங்காக்களை சீரமைத்தல், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல், பூம்புகார் நிலையத்தில் கைவினைப் பொருட்கள், அலங்கார மீன்கள், பழங்காலப் பொருட்களை காட்சிப்படுத்துதல் வேண்டும்.

மாத்தூர் தொட்டிப்பாலத்தை சீரமைக்க வேண்டும். திற்பரப்பு அருவி பகுதியில் படிக்கட்டுகள், இருக்கைகள், பொருள் பாதுகாப்பு அறைகள் அமைக்க வேண்டும். சிற்றாறு அணைப் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி, அதில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தனியார் சார்பில் சுற்றுலா விடுதிகள் அமைக்கவும், சிற்றாறு அணையில் படகுத்தளம் மற்றும் நீர்விளையாட்டுகள் அமைக்கவும் வேண்டும், என்றார் ஆட்சியர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீத்தாராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x