

திண்டுக்கல்லில் கோட்டை குளம் சாலையில் தற்காலிக வியாபாரம் செய்ய அனுமதி கோரி மாநகராட்சி அலுவலகத்தை காய்கறி வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டு, பணி கள் முடியாத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவசரமாகத் திறக்கப்பட்டது. இதனால் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராத நிலையில் வியாபாரிகள் சாலையில் வியாபாரம் செய்தனர்.
கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக திண்டுக்கல் புறவழிச் சாலை அருகே உள்ள காலி இடத்துக்கு காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வெளியே கோட்டைகுளம் சாலையில் வியாபாரத்தை நேற்று தொடங்கினர். இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள், இங்கு வியாபாரம் செய்யக்கூடாது எனத் தெரி வித்து அகற்றக்கோரினர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேருந்து நிலையம் மற்றும் அண்ணாமலையார் பள்ளி வளாகத்தில் சில்லரை வியாபாரிகள் காய்கறிக் கடைகளை நடத்த ஆணையர் அனுமதி அளித்தார்.