

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பிரவேஷ்குமார் பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் சரக டிஐஜி-யாக மாறுதலாகிச் சென்றார். இந்நிலையில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.கலைச்செல்வன் என்பவரை தமிழக அரசு நியமித்தது.
கலைச்செல்வன் நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளராக பொறுப்பேற்று பணிகளை தொடங்கினார். இவர், 2012-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப் பட்டவர்.
தற்போது, சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் தருமபுரி மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். முதுகலை பட்டதாரியான இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர்.
கிருஷ்ணகிரியின்17-வது எஸ்பி
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள சாய்சரண் தேஜஸ்வி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர். கடந்த, 2014-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, நெல்லை மாவட்டத்தில் 6 மாத காலம் பயிற்சி பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேனி மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.