Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

தருமபுரியில் விதிமீறி இயங்கிய 40 கடைகளுக்கு அபராதம் :

தருமபுரியில் விதிமீறி இயங்கிய 40 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட மிக அத்தியாவசியமான கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில், ஜூன் 7 முதல் 14-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கை நீட்டித்தபோதும் புதிய தளர்வுகள் பலவற்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், கரோனா சூழலில் மிக அவசிய சேவைகள் அல்லாதவற்றை இயக்க இன்னும் அரசு அனுமதி வழங்கவில்லை. அவற்றில் ஜவுளிக் கடைகள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில், நேற்று தருமபுரி நகரில் சில இடங்களில் அரசு அனுமதி அளிக்காத சில கடைகள் இயங்குவதும், சமூக இடைவெளி பின்பற்றப்படாததும் தெரிய வந்தது.

எனவே, தருமபுரி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், தருமபுரி நகர பகுதியில் இயங்கிய ஜவுளிக் கடைகள், மொபைல் கடைகள், தேநீர் கடைகள், பிரவுசிங் மையங்கள் என மொத்தம் 40 கடைகளுக்கு இந்த குழுவினர் அபராதம் விதித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், இந்த கடை உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.ஆய்வின்போது, துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், ரமணசரண், சுசீந்திரன், நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காவல்துறை அபராதம்

அதேபோல, தருமபுரி மாவட்டத்தில் நேற்று கரோனா விதிகளை மீறிய 170 நபர்களிடம் போலீஸார் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர். முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் சென்ற 150 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.30 ஆயிரமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத 20 நபர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிகப்பட்டது.

இதுதவிர, இ-பதிவு இல்லாமல் இயக்கப்பட்ட 60 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x