பறிமுதல் செய்த மதுபான பாட்டில்களை விற்றதாக காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் : தஞ்சை சரக டிஐஜி நடவடிக்கை

பறிமுதல் செய்த மதுபான பாட்டில்களை விற்றதாக காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் :  தஞ்சை சரக டிஐஜி நடவடிக்கை
Updated on
1 min read

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச் சிற்றம்பலம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா தடுப்பு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தினர் அப்பகுதியில் சட்ட விரோதமாகப் பதுக்கிவைத்து விற்கப்பட்ட 434 மதுபான பாட்டில்களை மே 8-ம் தேதி பறிமுதல் செய்தனர்.

ஆனால், முறையாக வழக்கு பதிவு செய்யாமல், மதுபானம் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்வதை விடுத்து, எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை காவல் நிலையத்தினர் வேறொரு நபரிடம் விற்றுவிட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக, தஞ்சாவூர் சரக டிஐஜி உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார். காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் டிஐஜியிடம் டிஎஸ்பி அறிக்கை அளித்தார்.

இதைத்தொடர்ந்து, திருச்சிற் றம்பலம் காவல் ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமைக் காவலர் ராமமூர்த்தி ஆகியோரை தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in