

ஊரடங்கின்போது உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று வீடியோ வெளியிட்ட பூதப்பாண்டி பகுதி பெண்ணுக்கு உதவி வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி நரிப்பாலம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சுபலா(35). கடந்த 2-ம் தேதி வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்தார். அதில், நரிப்பாலம் பகுதியில் உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். தன்னார்வலர்கள் சிலர் இந்த வீடியோவைப் பார்த்து அவருக்கு உதவிகள் வழங்கினர்.
இதனிடையே, வீடியோ பற்றி விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். கோட்டாட்சியர் சொர்ணராஜ் மற்றும் அதிகாரிகள் நரிப்பாலம் சென்று சுபலாவிடம் விசாரித்தனர். அவருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என தெரிவித்தனர். அப்பகுதியில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. பால், காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் அப்பகுதிக்கு இயக்கப்பட்டன.
மனஉளைச்சலில் தவித்த சுபலாவுக்கு, மாவட்ட சமூக நலஅலுவலர் கலந்தாய்வு வழங்கினார்.
சுபலாவுக்கு மட்டுமின்றி, அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.