

திருப்பூரில் 10 சதவீத தொழிலாளர்களுக்கு மேல் இயங்கும் ஏற்றுமதிநிறுவனங்களுக்கு ‘சீல்' வைக்கப்படுமென, அதிகாரிகள் மற்றும் தொழில் துறையினர் பங்கேற்ற கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரையில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதிநிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள் ஆகியவை ஏற்றுமதிதொடர்பான பணிகளுக்கான ஆணை இருந்தால், ஏற்றுமதிக்கான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, இன்றுமுதல் (மே 7) திருப்பூரில் ஏற்றுமதி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட உள்ளன. இதற்கிடையே, அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது.
மாநகர நல அலுவலர் பிரதீப் வாசுதேவ் தலைமை வகித்தார். வடக்கு தலைமையிட வட்டாட்சியர் சரவணன், காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டஅதிகாரிகள், தொழில்துறையினர் பங்கேற்றனர்.
அரசு வழிமுறைகளை பின்பற்றிஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க வேண்டும். 10 சதவீதத்துக்கும்மேல் தொழிலாளர்களைகொண்டு நிறுவனங்கள் இயங்கினால் 'சீல்' வைக்கப்படும். நிறுவனங்களில் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிவதுடன், சமூகஇடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.தொழிலாளர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம்செய்ய வைக்க வேண்டுமென அறிவுறுத் தப்பட்டது.