காஞ்சிபுரத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி - சாலைகளில் சுற்றித்திரிந்தோரின் வாகனங்கள் பறிமுதல் :

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி நகர சாலைகளில் நேற்று சுற்றிய இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசு கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதில், இன்று முதல் சில தளர்வுகளுடன் குறிப்பிட்ட சில கடைகள் மற்றும் காய்கறி, பழக்கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தளர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து முழு ஊரடங்கு நாளான நேற்று பொதுமக்கள் காலை முதலே சாலைகளில் சுற்றித் திரிந்தனர்.

மேலும், பூக்கடை சத்திரம், ரயில்வே சாலை மற்றும் ஏகாம்பரநாதர் சந்நிதி தெரு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் காய்கறி மற்றும் பழக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நகர சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தனர். இதனால், பூக்கடை சத்திரம், ரங்கசாமி குளம் பகுதிகளில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்த வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்த வாகனங்களை உடனடியாக லாரியில் ஏற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் நிறுத்தினர். இதையடுத்து, நகர சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in