இலவச மின்சாரம் வழங்க மா விவசாயிகள் கோரிக்கை :
மா விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், அரசு மானியமும் வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட நிலப்பரப்பில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பகுதியில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, மாவட்டத்தில் மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலைகளும் பெருகின. படிப்படியாக அதிகரித்த மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலைகள் பின்னர் பல்வேறு காரணங்களால் படிப்படியாக குறையத் தொடங்கின. தற்போது 10 தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. ஆனால், மா சாகுபடி பரப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில், மாங்கூழ் உற்பத் தியாளர்கள் ஒருங்கிணைந்து பேசி மாம்பழத்துக்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்கின்றனர். எனவே, போதிய விலை கிடைக்காமல் மா விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தொடர் இழப்புகளால் 40 சதவீதம் விவசாயிகள் மா சாகுபடியை கைவிட்டுள்ளனர்.
எனவே, மா விவசாயத்தை காக்க இலவச மின்சாரம், உற்பத்தி மானியம் வழங்க வேண்டும். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ‘கிருஷ்மா’ திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
