தஞ்சாவூர் மாவட்டத்தில் காற்றுடன் மழை - 100 ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடையில் சிக்கல் :

தஞ்சாவூர் மாவட்டத்தில் காற்றுடன் மழை -  100 ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடையில் சிக்கல் :
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணிநேரம் பெய்த காற்றுடன் கூடிய மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்ததால் அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

வெப்பச் சலனம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய மழை பரவலாக பெய்தது. இந்த மழையால் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, கடும் குளிரான காலநிலை நிலவியது. அதேநேரத்தில், மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை சாகுபடி நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்தன. குறிப்பாக, வேங்கராயன்குடிக்காடு, தென்னமநாடு, ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்தன. இதனால், விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், மாவட்டம் முழுவதும் அறுவடை செய்து, கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நேற்று முன்தினம் பெய்த மழையில் நனைந்தன. தொடர்ந்து, நேற்று காலை அதிக வெயிலடிக்கத் தொடங்கியதால், மழையில் நனைந்த நெல் மணிகளை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வேங்கராயன்குடிக் காடு விவசாயி ஜெய்சங்கர் கூறியது: சாதாரணமாக, அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறு வடை செய்ய ஒரு மணி நேரத் துக்கு ரூ.1,800 வாடகையாக வசூலிக்கப்பட்டு, ஒன்றரை ஏக்கர் நெற்கதிர்கள் அறுவடை செய்யப்படும். ஆனால், தற்போது மழையால் நெற்கதிர்கள் கீழே சாய்ந்து கிடப்பதால், இதே நிலத்தில் நெற்கதிர்களை அறுவடை செய்ய 3 மணி நேரம் ஆகும். இதனால், விவ சாயிகளுக்கு கூடுதல் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழையால் நெல்மணிகள் உதிரத் தொடங்கியுள்ளதால், மகசூல் இழப்பும் ஏற்படும் என்றார்.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): திருவையாறு 54, பூத லூர் 38, திருக்காட்டுப்பள்ளி 36, கல்லணை 28, கும்பகோணம் 26, பாப நாசம் 25, திருவிடைமருதூர் 21, அய்யம்பேட்டை 21, மஞ்சளாறு 20, வெட்டிக்காடு 16, தஞ்சாவூர் 8, வல்லம் 7.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in