

பால் உற்பத்தியாளர்கள், விற் பனையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கரோனா காலகட்டத்தில், மருத்துவத்துறை, காவல்துறை, துப்புரவு துறையினரை போல், பால்வள பணியாளர்களும் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றி வருகின்றனர். மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தங்களது பாலை வழங்குகின்றனர்.
உள்ளூர் விற்பனை போக மீதமுள்ள பால், ஒன்றியத்திற்கும், கூட்டுறவு பால் இணையத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கூட்டுறவு பால் இணையம், வீடுகள் தோறும் பால் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மூன்றடுக்கு முறையில் இரவு, பகல் பாராமல் அரசுக்கு ஒத்துழைப்பு தரும் பால்வள பணியாளர்களை, முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.