

மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி புறநோயாளிகள் பிரிவைத் தொடங்கலாமா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த புஷ்ப வனம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2018-ல் அறிவித்தது. மறு ஆண்டு பிரதமர் மோடி நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இருப்பினும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
மதுரையுடன் அறிவிக்கப்பட்ட 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உத்தரப் பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங் களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெறு வதுடன், இந்த மாநிலங்களில் புற நோயாளிகள் பிரிவும் தொடங்கப் பட்டுள்ளன.
எனவே, மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனையைத் தொடங்கி, புற நோயாளிகளு்கான சிகிச்சை மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையைத் தொடங்க உத்தர விட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்கி, புறநோயாளிகள் பிரிவைத் தொடங்க முடியுமா? புறநோயாளிகள் பிரிவு தொடங்கினால் பலருக்கு சிகிச்சை அளிக்க முடியும். எனவே, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசு கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 11-க்கு ஒத்திவைத்தனர்.