

அனைத்து வயதினருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மூலம் குடியரசு தலைவருக்கு, எம்பி செல்லக்குமார் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம், காங்கிரஸ் எம்பி செல்லக்குமார் கோரிக்கை மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு முறையாக திட்டமிடாததால் கரோனா தொற்றால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகள் கடந்த 2020 மே மாதமே தடுப்பூசிகள் கொள்முதல் செய்யும் முயற்சி எடுத்தபோது மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் இருந்தது.
ஜனவரியில் மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது. அப்போது சுய விளம்பரத்திற்காக 6.5 கோடி தடுப்பூசியை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அந்த தடுப்பூசியை இந்திய மக்களுக்கு செலுத்தி இருந்தால் கரோனா நோயால் இவ்வளவு மக்கள் உயிர் இழக்கும் சூழல் ஏற்பட்டு இருக்காது. மத்திய அரசு கூறுவது போல் நாள் ஒன்றுக்கு 16 லட்சம் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இன்னும் 3 ஆண்டுகள் ஆனாலும் இந்த பணி முடியாது. அதன் காரணமாக அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிற மனுவை மாவட்ட ஆட்சியர் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நடராஜன், துணை தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.