

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24.05.2021 முதல் 07.06.2021 வரை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2,000 போலீஸார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு சிரமமான சூழ்நிலையில் கரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல் துறையினரின் பாதுகாப்புக்காக தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான கரோன தடுப்புஉபகரணங்களை வழங்கியுள்ளது. மாவட்டத்தில் அனைத்து காவல்நிலையங்களில் பணிபுரியும் காவல்துறையினர் அனைவருக்கும் முகத்திரைகள், கையுறைகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் கரோனா தடுப்பு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை துணை கோட்டங்கள் வாரியாக காவல் துறையினருக்கு எஸ்பி வழங்கி வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், மணியாச்சி ஆகிய நான்கு துணைக் கோட்டங்களில் பணிபுரியும் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டன.
நேற்று இரண்டாம் கட்டமாக வைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய நான்கு துணைக் கோட்டங்களில் பணிபுரியும் காவல் துறையினருக்கு கரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி கார்த்திகேயன், அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள் மயில்குமார், கணேசபெருமாள் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.