

நாகப்பட்டினம்: கரோனா தொற்று பரவல் காலத்தில், உலமாக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல தரப்பினரையும் தமிழக அரசு அடையாளம் கண்டு உதவி வருவது பாராட்டுக்குரியது. இதுபோன்று, உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள் உள்ளிட்ட பணியாளர்கள், தர்ஹா பணியாளர்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்களுக்கு அரசு உரிய நிவாரண உதவித் தொகையை வழங்கி உதவ வேண்டும். வக்பு வாரியத்தின் மூலமாக இதற்கான ஏற்பாடுகளை செய்தால், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றார்.