

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1000 கனஅடியாக சரிந்தது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மழை பொழிவு இல்லாததால் படிப்படியாக குறையத் தொடங்கிய நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 1200 கனஅடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1000 கனஅடியாக சரிந்தது.
மேலும், மாவட்டத்தில் தருமபுரி, ஒகேனக்கல் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. நேற்று காலை 7 மணியளவில் ஒகேனக்கல்லில் 20 மிமீ, தருமபுரியில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 45 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 40.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றில் விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதே போல் நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவானது.