

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பிற நோயாளிகள் குறித்த நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்வதிலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இலவச ஆட்டோ சேவை நேற்று தொடங்கியது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை, பாடியநல்லூர், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் 22 ஆட்டோக்கள் இந்த இலவச சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஈகுவார்பாளையம், கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ஒரு கார் என, 2 கார்கள் இச்சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் நேற்று நடந்த இலவச ஆட்டோ சேவையின் தொடக்க விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ப.சுந்தர்ராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், சிஐடியு மாவட்ட செயலாளர் கே .ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த இலவச ஆட்டோ சேவையை பெற விரும்புவோர்7200045740, 9382977911, 9940270037, 9444115773, 9884465348, 9443248799, 7338913972 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.