

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் வீடுகள்தோறும் காய்ச்சல், இருமல், சளி உள்ள நபர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் கரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:
கிராமப்புறங்களில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறியான காய்ச்சல், இருமல், இருக்கும் போதே உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாமல் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு செல்வதால் மிகுந்த ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே முன்கூட்டியே நோய் தொற்றினை கண்டறிந்து அவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் நோய் தொற்று அறிகுறிகள் தொடர்பாக வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியினை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அதன் விவரங்களை உடனடியாக மருத்துவ அலுவலரிடம் தெரிவித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஒரு சுற்று கணக்கெடுப்பு முடிவுற்ற பின்னர் தொடர்ந்து கணக்கெடுப்பை மேற்கொண்டு இத்தொற்றினை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இக்கணக்கெடுக்கும் பணியினை ஒரு தீவிர இயக்கமாக விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.