

வங்கிகள் கடன் வசூலை ஒரு ஆண்டிற்கு தள்ளி வைப்பதுடன், ஒத்தி வைத்துள்ள கால கட்டத்தில் கடனுக்கான வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் அளவில் பாதித்துள்ளனர். விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக தேசிய வங்கிகள், தனியார் வங்களில் பல்வேறு கடன்களைப் பெற்று திருப்பி செலுத்த வழியில்லாமல் உள்ள இந்த நேரத்தில், தேசிய வங்கியின் மேலாளர்களும், தனியார் வங்கி மேலாளர்களும் விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து, அபராதம் மற்றும் வராக்கடன்களில் சேர்ப்பதாக மிரட்டி வருகின்றனர். எனவே தாங்கள் கருணைகூர்ந்து விவசாயிகளின் கஷ்டத்தை தீர்க்க, பிரதமரையும், ரிசர்வ் வங்கி ஆளுநரையும் வலியுறுத்தி அனைத்து வங்கி கடன்களையும், ஒரு ஆண்டிற்கு தள்ளி வைப்பதுடன், ஒத்தி வைத்துள்ள காலக் கட்டத்தில் கடன் வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய வழி வகை செய்ய வேண்டும்.