

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சிறப்பு தூர் வாரும் பணிகள் குறித்து அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் பேசியது: தூர் வாரும் பணிகளுக்கு தேவையான இயந்திரங்களை உடனடியாக மற்ற இடங்களிலிருந்து பெற்று, பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே இயந்திரங்களை பயன்படுத்தி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தூர் வாரும் பணி மேற்கொள்ளும்போது, கரைகளை முழுமையாக சீர்செய்து, கரைகளில் போடப்படும் மண் மீண்டும் ஆற்றுக்குள் வராத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் உள்ள மண் திட்டுகளை அகற்றுவதுடன், ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகளை முழுமையாக அகற்றி தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒருமுறை பணி செய்தால் 5 ஆண்டுகளுக்கு அப்பணியை திரும்ப செய்யாத வகையில், தரமான வகையில் செய்ய வேண்டும். பொதுப்பணித் துறை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பணியை முடித்தால் தான், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்தமுறை பணிகள் மேற்கொள்ளப்படும் போது, வெளிப்படையாகவும், நேர்மையாகவும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் செயல்படுத்தப்படும்.
வரும் காலங்களில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தூர் வாரும் பணிகள் தொடங்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, தூர் வாரும்போது ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விவசாயிகள், வருவாய்த் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதில், எம்பிக்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், க.அன்பழகன், கா.அண்ணாதுரை, என்.அசோக்குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.