

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 24 வயதாகும் ‘தெய்வானை’ யானை, கோயில் விழாக்களின் போது அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு முன்னே செல்வது வழக்கம். தற்போது கரோனோ ஊரடங்கு அமலில் உள்ளதால், தெய்வானை யானை எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறது. கரோனா தொற்று விலங்குகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதால், தெய்வானை யானைக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தினமும் கோயில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் தடியங்காய், பூசணிக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், கேரட், தர்பூசணி, வெள்ளரிக்காய், அவல், பேரிச்சை, நாணல் புல் மற்றும் தென்னை ஓலை போன்ற வைட்டமின் சத்துகள் நிறைந்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, தேவையான மருந்துகளும் வழங்கப்படுகின்றன. இதுதவிர தினமும் குளிப்பாட்டப்பட்டு, நடைபயிற்சியும் அளிக்கப்படுகிறது.