

திருநெல்வேலி மாவட்டத்தில் 320 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 2 கரோனா சிகிச்சை மையங்களை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை அருகே மன்னார்புரம் புனித அந்தோனியார் கல்வியியல் கல்லூரியில் 140 படுக்கைகள், தெற்கு வள்ளியூர் யுனிவர்சல் பொறியியல் கல்லூரியில் 180 படுக்கைகள் கொண்ட, கரோனா சிகிச்சை மையங்கள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை, சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம்தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஞானதிரவியம் எம்.பி., எம்எல்ஏக்கள் மு.அப்துல்வகாப், ரூபி மனோகரன், மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டப்பேரவைத் தலைவர் கூறும்போது, ``தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க போதுமானஅளவுக்கு படுக்கை வசதியும், ஆக்சிஜன் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள் பல்வேறு சவால்களை சந்தித்து கரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகளால் கரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் கூறும்போது, ``புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெறுவோருக்கு, இலவசமாக சத்தான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.