

கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே துரிஞ்சிதலைப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்(35). இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன், குடியாத்தம் பகுதியில் இருந்து காரில் பெங்களூரு நோக்கி சென்றார். கிருஷ்ணகிரி அருகே சுண்டம்பட்டி என்னுமிடத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் ரமேஷ், அவரது மனைவி தீபா (30), மகன் நித்தீன் (1), உறவினர்கள் அஞ்சலி (34), சரளா (35) ஆகிய 5 பேர் இறந்தனர்.
மேலும் காரில் இருந்த சரளாவின் குழந்தைகள் சாரிகா (9), ஓவியா (5) மற்றும் சதீஷ்குமார் என்பவரின் மகன் நித்தின் (11) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், நித்தின் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு நித்தின் உயிரிழந்தார். இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கந்திகுப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.