தஞ்சாவூர் மாவட்டத்தில் - ஜூன் 15-க்குள் தூர் வாரும் பணி நிறைவுறும் : கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் -  ஜூன் 15-க்குள் தூர் வாரும் பணி நிறைவுறும் :  கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் தகவல்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகள் ஜூன் 15-ம் தேதிக்குள் நிறைவு பெறும் என கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் நேற்று தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரத்தில் வெண்ணாற்றில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில், மணற் திட்டுகளை அகற்றும் பணியை சிறப்பு தூர் வாரும் பணி கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பிரதீப் யாதவ் கூறியது: தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.20.50 கோடி மதிப்பீட்டில் 1,169 கிலோ மீட்டர் நீளத்துக்கு வாய்க்கால்கள், வடிகால்கள் தூர் வாரப்படுகின்றன. ஒரு சில இடங்களில் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் அனைத்து பணிகளும் தொடங்கும்.

தூர் வாரும் பணிகள் தரமாக நடைபெறவும், பாசனத்துக்கு தண்ணீர் வருவதற்குள் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தூர் வாரும் பணிகளை அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பார்வையிடலாம்.

தூர் வார தேவையான இயந்திரங்கள் பிற பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் கடைமடைப் பகுதி வரை செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகள் நிறைவு பெறும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

ஆய்வின்போது திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், ஆட்சியர் ம.கோவிந்தராவ் மற்றும் பொதுப்பணித் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்ந்து, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் தூர் வாரும் பணியை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in