

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் கரோனா பாதிப்பில் இருந்து 8338 பேர் மீண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 21-ம் தேதி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 739-ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 297-ஆக இருந்தது.இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தும், குணமடைந்து வருபவர் களின் எண்ணிக்கை உயர்ந்தும் வருகிறது.
கடந்த 22-ம் தேதி 109 பேரும், 23-ம் தேதி 210 பேரும் 24-ம் தேதி 1168 பேரும், 25-ம் தேதி 1620 பேரும், 26-ம் தேதி 817 பேரும், 27-ம் தேதி 1078 பேரும், 28-ம் தேதி 1230 பேரும், 29-ம் தேதி 1078 பேரும், நேற்று முன்தினம் 731 பேரும் என கடந்த 10 நாட்களில் 8338 பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் 800-ல் இருந்து 700 ஆக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களில் படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 486 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 32 ஆயிரத்து 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 ஆயிரத்து 879 பேர் குணமடைந்துள்ளனர். 195 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 63 ஆயிரத்து 809 பேர் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் கரோனா தடுப்பூசியை 2 லட்சத்து 5 ஆயிரத்து 575 பேர் போட்டுள்ளனர். கரோனா நோய் பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்.
அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தாலும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.