

“தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 26 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்” என, தமிழக மீன்வளம், மீனவர் நலன்மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பேயன்விளை, பரமன்குறிச்சி, நாசரேத், குரங்கணி பகுதிகளில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரோனா தொற்றை தமிழகத்தில் முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தினமும் சுமார் 9,500 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது26 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி நம்முடைய உயிரை காக்கக்கூடியது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.