

தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் வாகனங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா பரவலை கட்டுப்படுத்த மே 31 முதல் ஜூன் 7-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழம், மளிகை பொருட்கள் போன்றவை மாவட்டம் முழுக்க வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனம், காப்பீட்டு நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய வேண்டும். மின்னணு சேவைகள் மட்டும் காலை 8 முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். உணவகங்கள் பார்சல் சேவையை மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. மருத்துவ காரணங்கள், இறப்புகளுக்கு மட்டுமே பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பதிவு முறையில் அனுமதி அளிக்கப்படும்.
ரேஷன் கடைகளில் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு அரசால் வழங்கப்பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு விதிகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்றினால் தான் கரோனா பரவலை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.