

கிருஷ்ணகிரி மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்ஐ குமார் தலைமையில் எஸ்எஸ்ஐக்கள் அறிவழகன், முனுசாமி, கண்ணன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி மேம்பாலத்தில் வாகனத் தணிக்கை மேற் கொண்டனர். அவ்வழியே சந்தேகப்படும்படியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அதில், கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 38 பெட்டி மது பாட்டில்கள் இருந்தன. அதில் 1,392 குவாட்டர் மது பாக்கெட்டுகளும், 432 பிளாஸ்டிக் குவார்ட்டர் மது பாட்டிகளும் இருந்தன. அதன் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 7 ஆயிரம் 640. இதனை தொடர்ந்து மதுபாட்டில்களுடன் லாரியையும் பறிமுதல் செய்த போலீஸார், அந்த லாரியின் ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் (24) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், கர்நாடக மாநிலம் பெங்களூரு தாசன்னபுரம் மார்க்கெட் பகுதியில் இருந்து பேரணாம்பட்டு வழியாக காஞ்சிபுரத்திற்கு லாரியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்தபோது, அதில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கடத்தியது தெரிந்தது.
கருணாகரனை கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.