

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தை கடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை 31,296 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 25,070 பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 189 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் வீடுகளில் தனிமை என மொத்தம் 6,037 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதே போல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி பணிகள் தற் போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கரோனா தாக்கம் அதிகரிப்பால் 45 வயதிற்கு மேற்பட்டவர் களும், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 ஆயிரத்து 603 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 96 ஆயிரத்து 932 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. நேற்று பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.