திருவள்ளூர் ரயில் நிலையத்தில் - மந்தகதியில் நடைபெறும் சுரங்கப்பாதை பணி : விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை

திருவள்ளூர் ரயில் நிலையத்தில்  -  மந்தகதியில் நடைபெறும் சுரங்கப்பாதை பணி :  விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை
Updated on
1 min read

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மந்தகதியில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சென்னை, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதன்படி, நாள்தோறும் 180புறநகர் ரயில் சேவைகளும், 22விரைவு ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மாதம்தோறும்ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைக்கிறது.

இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தில் ஆறு நடைமேடைகளுக்கும் பயணிகள் எளிதாக செல்லும் வகையில், சுரங்கப்பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள்கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.கரோனா ஊரடங்கின்போது விரைவாக இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, சிமெண்ட் பாக்ஸ்கள் மூலம் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால், இப்பணி ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை முடியவில்லை.

இதுகுறித்து, பயணிகள் கூறும்போது, “எங்களது நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பணி விரைவாக நடைபெற வேண்டும் என்பதற்காக, கான்கிரீட் பாக்ஸ்கள் மூலம் அமைக்கப்பட்டது. ஆனால், மற்ற எந்த அடிப்படைவசதிகளும் செய்யப்படவில்லை. குறிப்பாக, சுரங்கப்பாதையில் மின்சார வசதி,படிக்கட்டு, பக்கவாட்டு சுவர்களில் டைல்ஸ் பதித்தல், ஒலி பெருக்கிஉள்ளிட்ட வசதிகள் செய்யப்படவில்லை.

அதேபோல், மாற்றுத் திறனாளி பயணிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்படவில்லை. இதனால், அவர்களுக்கு இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.

அதேபோல், மழைக்காலத்தில் இந்த சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை அகற்றி, அருகில் உள்ள கூவம் ஆற்றில் விடுவதற்கு ஏற்ற வகையில் வடிகால் வசதி அமைக்க வேண்டும். ஊரடங்கு முடிந்து மீண்டும் வழக்கமான ரயில் போக்குவரத்து தொடங்குவதற்குள், இப்பணிகளை முழுமையாக செய்து முடிக்க ரயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in