

தஞ்சாவூரில் நேற்று போலீஸ் சோதனைச் சாவடி மீது கன்டெய்னர் லாரி மோதியதில் பந்தல் சரிந்து விழுந்து 2 போலீஸார் காயமடைந்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக, போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தஞ்சாவூர் கோடியம்மன் கோயில் அருகே சாலையில் போலீஸார் இரும்புத் தடுப்புகளைக் கொண்ட பேரிகார்டு அமைத்திருந்தனர். மேலும், போலீஸாருக்காக சாலையோரம் தென்னங் கீற்றாலான சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சாக்குகளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி, சாலையில் இருந்த பேரிகார்டில் மோதியதில், சாலையோரம் இருந்த சோதனைச் சாவடி பந்தலும் சரிந்து விழுந்தது. இதில், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பிரான்சிஸ் சேவியர் (54), பெண் போலீஸ் காயத்ரி ஆகியோர் காய மடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.