

காவேரிப்பட்டணம் அருகே விவசாயி வீட்டில் ஆடு மற்றும் பணம் திருடிய கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் நரிமேடு அடுத்த ஆண்டிகான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (50). நேற்று முன்தினம் இவர் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பட்டியில் கட்டி போட்டிருந்த ஆட்டின் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு எழுந்து ஜெயபால் பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் ஆட்டை திருடிச் செல்ல முயன்றார். அவரை ஜெயபால் மடக்கி பிடித்து காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவர், காவேரிப்பட்டணம் சந்தாபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கவேல் (21) என்பது தெரிந்தது.
மேலும், ஜெயபால் வீட்டில் இருந்து ஒரு ஆடு, ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் அடையாள அட்டைகள் திருடிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தங்கவேலை கைது செய்தனர்.