

காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்களை அவரவர் இல்லங்களில் இருந்தே வாங்கிக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளர் வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், முழு ஊரடங்கு காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் அவரவர் இல்லங்களுக்குச் சென்று விநியோகம் செய்ய ஏதுவாக காய்கறி வேன்கள் மற்றும் தள்ளுவண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் விநியோகம் செய்ய, 30 மினி வேன்களும், 28 தள்ளு வண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் விநியோகம் செய்ய, 90 காய்கறி வாகனங்கள், 15 பழ வாகனங்கள், 14 மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் விநியோகம் செய்ய, 59 மினி காய்கறி வேன்களும், 20 பழ தள்ளு வண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த வாகனங்களின் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை பொது மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வாங்கிக் கொண்டு, ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களையும், தங்கள் சுற்றத்தாரையும் கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.