மேகேதாட்டுக்கு வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும் : தமிழக அரசுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்

மேகேதாட்டுக்கு வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும் :  தமிழக அரசுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்
Updated on
1 min read

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டில் அணைகட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு வல்லுநர் குழுவை அங்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணிய ரசன் விடுத்துள்ள அறிக்கை விவரம்: மத்திய அரசின் சூழலியல் துறை, வனத் துறை ஆகியவற்றின் அனுமதியைப் பெறாமல், சட்ட விரோதமாக மேகேதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியுள்ளதாக நாளிதழில் வந்த செய்தியை அடிப்படைத் தகவலாகக் கொண்டு, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டலப் பிரிவு, தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அதிக வெள்ளக் காலத்தில் கர்நாடக அணைகளில் தேக்க முடியாத காவிரி நீரையும் தேக்கி, மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு மிகை நீர் கூடப் போகாமல் தடுக்க வேண்டும் என்ற சதி நோக்குடன் கர்நாடக அரசு அந்த அணையைக் கட்ட முயல்கிறது.

காவிரி உரிமை மீட்புக்குழுவில் உள்ள அமைப்புகள், மேகேதாட்டு அணைத் திட்டம், உச்ச நீதிமன்றம் 16.2.2018-ல் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன.

மேகேதாட்டில் அணை கட்டும் கர்நாடக அரசின் சட்டவிரோத முயற்சிக்கு தடை கோரி, தமிழ்நாடு அரசு கடந்த 2018 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கிடப்பில் போட்டுவிட்டது. தமிழ் நாடு அரசும் அவ்வழக்கை உயிர்ப் பித்து, விரைந்து நடத்த உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

தற்போது, மேகேதாட்டில் அணை கட்டும் பணிகள் நடப்பதாக செய்தி வருவதால், வனப் பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு கருதி, தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தீர்ப்பாய நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, மேகேதாட்டில் அணை கட்டுவதற்கான அடிப் படைப் பணிகள் நடந்துள்ளனவா என்று கண்டறிந்து அறிக்கை தர, கர்நாடகத்துக்கு வல்லுநர் குழுவை அனுப்பி வைக்க வேண்டும்.

அத்துடன், உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள மேகே தாட்டு அணை தடுப்புக்கான வழக்கை உயிர்ப்பித்து, உடனடி யாக விசாரணைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மேகேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு, மத்திய அரசின் நீர்வளத் துறை கொடுத்து வரும் மறைமுக அனுமதியை திரும்பப் பெறுமாறு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in