Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM

வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் - விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் : நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை

மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சீர்திருத்த சட்டங்களை இயற்றியது. இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.

வேளாண் போராட்டங்களைத் தொடங்கி நேற்று வரை 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி நேற்றைய தினத்தை கருப்பு தினமாக கடைபிடித்து மத்திய அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியு ஆகியவை சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் துளசிநாராயணன், சிஐடியு திருவள்ளூர் மாவட்ட தலைவர் விஜயன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆவடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் பேசும்போது, “டெல்லியில் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகளை பாதிக்கும் இந்த சட்டங்களைதிரும்ப பெறாமல், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்றபிடிவாதத்தில் இருந்து வருகிறது.

பிரதமர் மோடி இனியாவது போராடும் விவசாயிகளை அழைத்து பேசி வேளாண் திருத்தசட்டங்களை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்றார்.

காஞ்சிபுரத்தில், விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை விவசாய சங்க மாவட்டச் செயலர் கே.நேரு, மாவட்டத் தலைவர் சாராங்கன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சங்கர் உள்ளிட்டநிர்வாகிகள் பலர் ஒருங்கிணைத்தனர். 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றினர்.

செங்கல்பட்டில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் மாநில செயலாளர் பிரமிளா, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், சிஐடியு மாவட்ட செயலாளர் பகத்சிங், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ் பாரதிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிபிஐ(எம்.எல்.) மாநில செயலாளர் சொ.இரணியப்பன் தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் வண்டலூரில் நடைபெற்றது.

மத்திய அரசு, விவசாயிகளை பாதிக்கும் இந்த சட்டங்களை திரும்ப பெறாமல், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகபிடிவாதமாக செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x